Friday, April 22, 2005

The Station Agent: ஸ்டேஷன் ஏஜண்ட்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மாண்ட்ரீஸர்

சென்றவாரம் முழுவதும் வலைப்பதிவுகளில் காதல்கவிதைகளாகப் படித்துப் பழைய நினைவுகளில் மூச்சுத்திணறி மீண்டுகொண்டிருந்தபோது, காரணமே இல்லாமல், குள்ளர்களைப்பற்றிய கவிதை ஏதாவது தமிழில் படித்திருக்கிறோமா என்று யோசிக்கத்தோன்றியது - ஏதோ மளிகை வாங்கப்போனபோது அபூர்வ சகோதரர்கள் ஒளிப்பதிவுநாடாவைக் கடையில் பார்த்ததும் என்று நினைக்கிறேன். வழக்கம்போல, பின்னுக்குத்திரும்பிய நினைவுகள், படத்தில் பார்த்த குள்ளர்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவரத்தொடங்கியது - பழைய தவக்களை, அப்பு கமல், டேவிட் லிஞ்ச்சின் Twin peaks மற்றும் Twin peaks: Firewalk with me யில் 'கார்மன்போஸியா' என்று குழறிக்கொண்டே உளறும் மர்மக் குள்ளன், குள்ளனா இல்லையா என்று இன்றுவரை தெரிந்துகொள்ள - திரும்பக் கதையைப் படித்துப்பார்க்க விரும்பாத எட்கர் ஆலன் போவின் Hop-frog கதையின் கொடூரக் கோமாளி, இவர்கள் அனைவரையும் தன் சின்னச்சின்ன அடிகளால் மெதுவாகக் கடந்துவந்து நினைவில் நின்ற சமீபக் குள்ளன், ஐந்தாறு மாதங்களுக்குமுன்பு பார்த்த 'ஸ்டேஷன் ஏஜண்ட்' படத்தில் வந்த ஃபின்பார் என்ற குள்ளன் பாத்திரம். வெறும் blurb படித்து, போனால் போகிறதென்று நம்பிக்கையின்றி எடுக்கும் எத்தனையோ படங்கள், "என்னையா கீழ்ப்பார்வை பார்த்தாய் நீ" என்று தலையில் ஒரே போடாகப் போடும். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இந்தப் படமும். பார்த்துப் பலநாளாகிவிட்டதால், திரும்ப அதைப் பார்த்திராததால், தனிப்பட்ட கோணல் ஒரேயடியாக அதைப் புகழத்தோன்றுகிறதா என்பதைப் படம்பார்த்தபின் நீங்களே முடிவுசெய்துகொள்ளலாம்.

ஃபின்பார், மூன்றடி உயரம்கொண்ட ஒரு குள்ளன். அவனுக்குப் பிடித்தவை ரயில்கள். ஒரு பொம்மை ரயில் செய்யும் கடையில் வேலைசெய்கிறான், அதன் முதலாளிதான் அவனுக்கு ஒரே தோழன். பொட்டென்று ஒருநாள் கட்டையைச் சாய்த்துவிடும் முதலாளி, போகுமுன்பு ஃபின்பார் பெயருக்கு நியூஜெர்ஸியிலுள்ள ஒரு ரயில்பாதையோரக் கூண்டுவீட்டை (cabin) எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறான். சேமிப்பில் கொஞ்சம் பணம் மிச்சமிருப்பதால், அந்தக் கூண்டுவீட்டுக்கு இடம்பெயர்கிறான் ஃபின்பார். நட்பெதிர்ப்பு என்ற எல்லைவரை நீளுமளவு அழுத்தமான தனிமையைக் கடைப்பிடிக்கும் ஃபின்பார், அந்தக் கூண்டுவீட்டுக்கு எதிராகவுள்ள பல்வேறு தண்டவாளங்களில் செல்லும் ரயில்களைப் பார்த்தவாறும், அவ்விடத்துக்கு அருகிலுள்ள சிறிய குடியிருப்புப்பிரதேசங்களில் நடந்தவாறும் தன் அன்றாட வாழ்வைத் துவங்குகிறான். அக் கூண்டுவீட்டுக்கு எதிரில் ஒரு நகரும்-உணவகம் வைத்திருக்கும் ஒரு க்யூபனின் நட்புரீதியான விசாரிப்புக்களை முற்றிலுமாகத் தவிர்க்கமுயலும் ஃபின்பார், பின்பு அந்தக் க்யூபனின் அபரிமிதமான உற்சாகம், நிராகரிப்பென்பதைப் புரிந்துகொள்ளமுடியாதளவு வலிமையானதென்று தெரிந்தபிறகு அவனது நண்பனாகிறான். மகனை இழந்த சோகத்தில் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஓவியை ஒருத்தி இரண்டுமுறை ஃபின்பாரைத் தன் காரால் இடிக்கப்போய், மயிரிழையில் தவிர்த்து, பின்பு அவனுக்குத் தோழியாகிறாள். அந்தச் சிறு நகரத்தின் நூலகத்தில் நூலகனாயிருக்கும் விடலைப்பெண்ணுக்கும் அவன்மேல் ஒரு கண்.

க்யூபனும் ஓவியையும் ஃபின்பாரும் வெகு நெருக்கமான நண்பர்களாகிறார்கள். சற்றே தயக்கத்துடன் கேட்கிறான் க்யூபன்: "உடலுறவு கொண்டிருக்கிறாயா?" "ஆமாம்." "அதாவது...நிஜ அளவு உயரமுள்ள பெண்ணோடு?" "ஆம், நிஜ அளவு உயரமான பெண்ணோடு". ஓவியை மீது ஃபின்பாருக்கு ஆர்வம் ஏற்படுகிறது, ஃபின்பார் மீது நூலகிக்கு ஆர்வம் ஏற்படுகிறது, ஓவியைக்கு ஃபின்பார் மேல் பரிதாபமா பாசமா என்று இனம்புரியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு இரவில் ஓவியை வீட்டில் பெரும் தீர்த்தயாத்திரை போட்டுவிட்டு ஃபின்பாரும் க்யூபனும் அங்கேயே உறங்கிப்போக, மறுநாள் காலையில் அவளைப் பார்க்கவரும் தனித்து வாழும் கணவன், சட்டையுடன் படியில் இறங்கி வரும் 'குள்ளனை'ப் பார்க்கிறான்....

கதையைத் தொடர்ந்து சொல்வதிலோ மேற்கொண்டு விவரிப்பதிலோ அர்த்தமில்லை; ஒருவிதமான நேர்த்தியற்ற முடிவைத்தவிர, படத்தை மிக ரசிக்கத்தக்கதாய்ச் செய்தவை வெகு நுட்பமான கவனிப்பு, ஃபின்பார் பாத்திரத்தில் நடித்த பீட்டர் டிங்க்லேஜின் மிகைப்படுத்தப்படாத நடிப்பு, இந்தப் பாத்திரத்தை மையம்கொண்ட நகைச்சுவை என்பதைக் காட்சிகளிலிருந்து கத்திரித்து எறிந்து, சிரிப்பதற்குப்பதிலாக ஒவ்வொரு தருணத்திலும் அழுத்தமான தர்மசங்கடமொன்றை உருவாக்குவது, கதைக்களன் - நிகழும் இடம் மீதான ஒரு இனம்புரியாத ஈர்ப்பு என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஐந்தாறு தண்டவாளங்கள்; வலப்பக்கம் ஒரு கூண்டுவீடு; அந்தப்புறம் ஒரு சின்னக் கடை; பச்சைப் புல்வெளி; சில மனிதர்கள்; ஏளனத்துடன் தன்னைப் பார்க்கும் பிறரைக் கூனிக்குறுகவைக்குமளவு தன் முகத்தில் காட்டும் ஆயுதமான வித்தியாசமின்மையை, அதேயளவு புதிருடன் தன்னைப் பார்க்கும் ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்க குண்டுச்சிறுமியிடம் உபயோகிக்கமுடியாமல் ஃபின்பார் தோற்கும் கணங்கள்; கவனிப்பாரற்றுக்கிடக்கும் பழைய ரயில்பெட்டிகள் - இத்தனைக்கும் மேலாக, கிட்டத்தட்ட ஹிட்ச்காக் படம் போல ஒரு சின்ன கதைக்களன், சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சம்பவங்கள் என்ற வடிவநேர்த்தியுடன், சாதாரண சம்பவங்களை சாதாரண மனிதர்களைக்கொண்டு (குள்ளன் என்ற ஒரு விஷயத்தின் நினைவுறுத்தலை ஃபின்பாருடன் சேர்ந்து படமும் கத்திரிக்க முயல்கிறது) இருப்பது இனம்புரியாதவகையில் நினைவுகொள்ளச்செய்தது இந்தப் படத்தை. முன்முடிவுகள் ஏதுமின்றி, இதைப் படித்ததை மறந்துவிட்ட ஏதோவொரு தருணத்தில் இப்படம் உங்களுக்குச் சிக்கி, பார்த்து, பிடித்திருக்கவும் செய்ததென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்!!

படம் நன்றி: Amazon

This page is powered by Blogger. Isn't yours?