Friday, April 22, 2005
Black: ப்ளாக்
நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்திச் சிறப்பாகப் பதிவுகள் எழுதக்கூடிய நம் நண்பர்கள் இதைப்பற்றியும் ஏற்கனவே எழுதியிருப்பார்களோ என யோசித்தேன். நான் வலைப்பதிவுகளுக்குள் வந்து போகும் கொஞ்ச நேரத்தில் தமிழ்மணத்தில் என் கண்களில்
தட்டுப்படும் “சமீபத்திய ஆக்கங்களாக” இதைப் பற்றிய பதிவுகளை நான் பார்க்கவில்லை. மற்ற நேரங்களில் வந்து, நான் படிக்காமலும் தவற விட்டிருக்கலாம்.
இந்தப் படம் பார்த்ததிலிருந்து இதை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் தேவலை என்று இருந்தது. எனவே எழுதுகிறேன். படத்தைப் பல கோணங்களிலும் அலசி, ஒரு நல்ல விமர்சனம் எழுதும் அளவு என் “சினிமா ஞானம்” இல்லை என்றாலும் நான் இதைப்பற்றிப்
பேசுகிறேன். காதல் பற்றியோ, கட்டிடக்கலையின் நுணுக்கங்கள் பற்றியோ, ஷாஜஹான் பற்றியோ ஏதும் அறிந்திருக்க முடியாத, ஆனால் பேச்சு வந்துவிட்ட குழந்தையிடம், அது அப்பா அம்மாவோடு தாஜ்மஹால் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றிக் கேட்டால்
அதற்கும் சொல்வதற்கு ஏதேனும் இருக்கும்தானே? அதுமாதிரி எனக்கு அமிதாப் பற்றியோ, ராணி முகர்ஜி பற்றியோ, இயக்குனர் பன்சாலி பற்றியோ எதுவும் அதிகம் தெரியாதெனினும் இவர்கள் சங்கமித்திருக்கும் “BLACK” படம் பற்றிப் பகிர்ந்துகொள்ளக் கொஞ்சம் விஷயம் இருக்கிறது. காரணம் அது தந்த பாதிப்பு. பலகாலத்திற்குப் பிறகு நான் பார்த்த இந்திப் படம் இது. அதுகூட, கடந்த சுட்டி விகடனில், “BLACK” படத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்ற குழந்தை என்று பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிறுமி ஆயிஷா பற்றி வந்த கட்டுரையினால் ஏற்பட்ட தூண்டுதலால் பார்த்தேன்.
ஒரு ஆங்கிலோ இந்தியத் தம்பதியின் இரண்டு மகள்களில் முதலாமவராகப் பிறந்து மிகச் சிறுவயதிலேயே கண்பார்வையையும், காது கேட்கும் திறனையும் இழந்த ஒரு பெண்ணின் கதை. ஆசிரியராக வரும் ஒருவர் அந்தப் பெண்ணின் இருட்டைக் கிழிக்கும் ஒளிக்கீற்றாய் அவள் வாழ்வில் உடன் வருகிறார். அவள் அறிந்த ஒரே நிறம் இருட்டுக்குரிய கறுப்பு என்பதால் “BLACK” என்று பெயர் சூட்டியிருக்கிறார் அதன் இயக்குனர் பன்சாலி என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அவள் வாழ்வின் வானவில் நிறங்களை ரசிக்கிறாள் அவளின் ஆசிரியர் மூலம் என்பதுதான் படத்தின் சாரம். ஆசிரியராக அமிதாப் பச்சன். அந்தப் பெண்ணாகச் சிறுவயதுக்கு பாண்டிச்சேரி ஆயிஷா, வளர்ந்தபின் ராணிமுகர்ஜி. கண்பார்வையும் காதுகேட்கும் திறனும் இழந்து, தன் ஆசிரியை Anne sullivan மூலம் வார்த்தைகளைக் கற்று, அத்தகைய குறைகள் கொண்டவர்களில் கல்லூரிப் பட்டம் பெற்ற உலகின் முதல் நபரான ஹெலன்கெல்லர் வாழ்க்கைதான் படத்திற்கு மூலம் என்கின்றன சில ஆங்கில விமர்சனங்கள். அது உண்மைதான் என்று நிரூபிக்கிறது படம்.
அந்தப் பெண்பாத்திரத்தின் பெயர் “மிஷேல்”. ஆசிரியரின் பெயர் ஷஹாய். சிறுவயது மிஷேல் தன் உடல்குறைகளின் வதையால் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுப் பெற்றோரிடமும், தங்கையிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டிருக்கிறாள். அவளை எப்படியாவது
சரியாக்க நினைக்கும் பெற்றோர் ஒரு நல்ல ஆசிரியரை வேலைக்குத் தேடுகின்றனர். ஷஹாய் வந்து சேர்கிறார். முதல் வேலையாக அவள் இருக்கும் இடத்தை சத்தம் மூலம் அறிவதற்காக, அவளின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த மணியைப் பிடுங்கி எறிகிறார் “அவள் மாடா?”
என்கிற கேள்வியோடு. ஆரம்பத்தில் மிஷேலை வழிக்குக் கொண்டுவரக் கடுமையாக நடந்துகொள்ளும் சஹாயைப் பிடிக்காமல் போகிறது அவளின் அப்பாவுக்கு. எனவே அவரைத் திருப்பி அனுப்பிவிட நினைக்கிறார். ஆனாலும் மகளுக்கு எப்படியாவது நல்லது நடந்துவிடாதா எனும் தவிப்பில் கணவன் வெளியூருக்குப் போனபின், சஹாயை அங்கேயே தங்கி மிஷேலுக்கு உதவ அனுமதிக்கிறார் அவளின் அம்மா. தண்ணீரைத் தொட்டுப் பார்க்க வைத்து “water” என்றும், கரண்டியைத் தடவவைத்து “spoon” என்றும் மிகுந்த போராட்டங்களுக்குப் பின் அவளுக்கு வார்த்தைகளை, அவற்றின் அர்த்தங்களைக் கற்றுக்கொடுக்கிறார் சஹாய். முரட்டுத் தனக்களிலிருந்து, அவளை மெல்ல
வெளிக்கொண்டுவருகிறார் நம்பிக்கை இழக்காமல். பின் மிஷேலின் அப்பாவும் ஆதரவு தெரிவிக்க, அவள் வாழ்வில் ஒவ்வொரு படிக்கல்லையும் ஷஹாயின் துணைகொண்டு ஏறும் உற்சாகத்திற்கு வந்துவிடுகிறாள்.
“ப்ராய்லி” எழுத்துரு மூலம் பள்ளிப்படிப்பு முடிக்கும் அவள் கல்லூரியில் சேர எளிதில் முடிவதில்லை. பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், முதல்வரும் ஷஹாயின் விடாத வற்புறுத்தலுக்குச் செவிசாய்த்து அவளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துவரச் சொல்கின்றனர். மிஷேல் வெற்றி பெறுகிறாள். தேர்வுகளில் பல தோல்விகளைச் சந்திக்கிறாள். மீண்டும் மீண்டும் முயல சஹாயும், பெற்றோரும் உதவுகின்றனர். இந்நிலையில் சஹாய்க்கு Alzheimer என்னும் ஞாபக மறதி நோய் தாக்கி நினைவுகளை இழக்க ஆரம்பிக்கிறார். மிஷேலுக்கு அவர்மீது ஆசிரியர் என்பதையும் தாண்டிய ஒரு உணர்வு இலேசாகத் துளிர்விடுவதுபோல் உணர்கையில் வெளியேறிவிடுகிறார். அதன்பின்னும் பல ஆண்டுகள் போராடி பட்டம் பெறும் மிஷேல், தன் ஆசிரியரைப் பார்த்து அச்சந்தோஷத்தைப் பகிர எண்ணுகிறாள். அவரைத் தேடுகிறாள். சஹாய் கிடைக்கிறார், ஆனால் அவளுக்கு அறிவூட்டிய ஆசிரியராக அன்றி நினைவுகளைத் தொலைத்து இருட்டில் வாழும் முதியவராகச் சிறுவயது மிஷேலின் நிலையில். இப்போது சஹாய்க்கு மிஷேல் ஆசிரியை ஆகிறாள். படம் முடிகிறது அதோடு.
நடித்திருப்பவர்கள் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றார்கள். நம்மையும் மிஷேலுடன் வாழுகின்றவர்களாய்ப் படம் முடியும்வரை பிடித்து வைத்துவிடுகின்றது அவர்களின் நடிப்பு. உடல் ஊனமுற்றவர்களை, பிறவிக் குறைபாடு உள்ளவர்களை நாம் எப்படி நடத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது படம். அவர்களுக்கு மூன்று வேளை உணவும், உடுத்துக் கொள்ளத் துணியும் தருவது மட்டும் அவர்களின் மீதான அன்பாகாது, எல்லோரைப் போலவும் அவர்களுக்கும் உள்ள உணர்வுகளையும், வாழ்வதில் இருக்கும் ஆர்வத்தையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது இப்படம். மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காமலாவது இருக்கிறீர்களா என்று நம் கன்னத்தில் அறைகிறது சில இடங்களில். பெற்றோர்களாலும், உறவினர்களாலும், உடனிருப்பவர்களாலும் எப்போதும் நம்பிக்கை வார்த்தைகளையும், ஊக்குவிக்கும் நடைமுறைகளையும் பெறமுடிகிற மாதிரி உடலூனமுற்றவர்களின் வாழ்க்கையை நாம் வைத்திருக்கவில்லை. சிறகிருக்கும் பறவைகளையே கூண்டுக்குள் அடைத்துவைக்கத் தயங்காத நாம் சிறகிழந்த பறவைகளுக்குச் சிறகுகள் வழங்க முன்வரும் நாள் எப்போது?
“இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கண்தெரியாத, காதுகேட்காத குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம்” என்று பேசப்படும் ஒரு இடத்தில் சஹாய் கேட்கிறார், “அங்கு எதற்கு? கூடையும் பாயும் முடையக் கற்றுக் கொள்ளவா? அங்கு பட்டதாரியாகும் அவளின் கனவை நனவாக்க முடியுமா?” என்று. நம் சமூகமும் இவர்களெல்லாம் அதுபோன்றவற்றைக் கற்றுக்கொள்ள மட்டுமே தகுதியானவர்கள் என்று வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பல நுண்ணிய விஷயங்களையும் விட்டுவைக்காது சொல்லியிருக்கிறார் பன்சாலி. இப்படி மிஷேலுக்கு எல்லாவிதத்திலும் முக்கியத்துவம் அளித்து அவளை மேலே கொண்டுவர நினைக்கும்போது, அவளின் தங்கை தன்னைப் புறக்கணிப்புச் செய்கிறார்கள் என்று எண்ணி தன் சகோதரியைக் காயப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதும், தன் சகோதரிக்குத் திருமணம் செய்யப்படும்போது மகிழ்ந்துபோய் பின் அந்த இராத்திரியில் அதுபோன்று ஒன்று தன் வாழ்வில் நடக்குமா என மிஷேல் தன் ஆசிரியரிடம் கேட்பதும், மிஷேலுக்காகத் துடிக்கும் அவள் தாயின் இதயமும் இயல்பான உணர்வுகளின் காட்சிகள்.
அமிதாப்பின் சின்னச்சின்ன வசனங்களும் அவர் முகபாவத்தாலும், நடிப்பாலும் மனதில் பதிந்துவிடுகின்றன.
” I never taught her the word impossible” என்று பல்கலைக் கழகப் பேராசிரியர்களிடம் கூறும் இடமும்,
“life is an icecream, we should enjoy before it melts” என்று மிஷேலைக் கூட்டிக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடப் போகும் இடமும் அழகிய சித்திரங்களாய் விரிகின்றன. சிறுமி மிஷேலாக வரும் ஆயிஷாவிடம் வயதுக்கு மீறிய திறமை இருக்கிறது.
“They took away what should have been my eyes
But I remembered Milton’s Paradise.
They took away what should have been my ears,
Beethoven came and wiped away my tears.
They took away what should have been my tongue,
But I had talked with God when I was young.
He would not let them take away my soul -
Possessing that, I still possess the whole.”
இவை ஹெலன்கெல்லர் தன் வழ்வு பற்றிச் சொன்ன வரிகள். மிஷேல் பாத்திரம் சொல்லும் செய்தியும் இதுதான்.
எல்லோரும் ஒருமுறை “BLACK” பார்க்கலாம், நிஜத்தில் நாம் கடக்க நேரும் மிஷேல்களின் வலியை அறிவதற்கேனும்.