Thursday, April 21, 2005

இந்த வலைப்பதிவு

உலகத் திரைப்படங்களைப்பற்றி தமிழ் வலைப்பதிவுகளில் பலரும் எழுதி வருகிறார்கள் - விமர்சனங்களின் இறுக்கத்தையும் தாண்டி தனிப்பட்ட திரையனுபவங்களும் ரசனையை வளர்க்க இன்றியமையாதவை என்பதால் இந்த வலைப்பதிவு தொடங்கப்படுகிறது. இந்த வலைப்பதிவு என்னுடைய தனிப்பட்ட வலைப்பதிவாக இயங்கும்.

திரைப்படங்களைப்பற்றிப் பலரும் எழுதுவதால், எழுதப்படும் பதிவுகள் அனைத்தையும் இங்கு பதிப்பிப்பது, திரைப்படம் தொடர்பாக வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கத்தில், திரைப்படங்கள் பற்றி என் கண்ணில் படும் அனைத்து வலைப்பதிவுகளையும் இங்கே சேர்க்க உத்தேசித்திருக்கிறேன்.

1) சேர்க்க உத்தேசித்தாலும், எழுதுபவர்கள் ஆட்சேபித்தால் இங்கே இட உத்தேசமில்லை. மேலும், எழுதுபவர்களின் அசல் வலைப்பதிவுகளின் பின்னூட்டங்கள் இங்கு திசைதிருப்பப்படாமலிருக்க, இந்த வலைப்பூவில் பின்னூட்டமளிக்கும் வசதியை நீக்கியுள்ளேன்.

2) ஒவ்வொரு பதிவின் text ஐ மட்டும், குறிப்பிட்ட வலைப்பதிவுகளிலிருந்து வெட்டி இங்கே ஒட்டுவதாய் எண்ணம். அப்படி ஒட்டிப் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு வலைப்பதிவின் தொடக்கத்திலும் அசல் வலைப்பதிவுக்கான சுட்டி இருக்கும். பின்னூட்டம் அளிக்க விரும்புபவர்கள், அந்த அசல் பதிவுக்குச் சென்று பின்னூட்டம் இடலாம்.

3) தமிழ்ப் படங்களைப்பற்றிப் பேசப் பலரும் இருப்பதால், தமிழ் அல்லாத பிறமொழிப் படங்கள் (இந்திய மொழிகள், அயல்நாட்டு மொழிகள்) குறித்த பதிவுகளை மட்டும் இங்கே இடுவதாய் உத்தேசம். ஒற்றை வரிப் பதிவுகள் என்றில்லாமல், சில பத்திகளாவது எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இங்கே இடுவதாய் உத்தேசம்.

4) அசல் பதிவின் தலைப்பு எப்படியிருப்பினும், இங்கே இடப்படும் பதிவின் தலைப்பு, படிப்போரின் வசதிக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும். உதாரணம் - (Mouna Ragam: மௌன ராகம்)

5) எனக்குப் பிடித்த/பிடிக்காத பதிவுகள் என்பதை இங்கே ஒரு அளவுகோலாக நான் கொள்ளவில்லை. இதற்கு முன் எழுதப்பட்ட பதிவுகளிலும், இனி எழுதப்படும் பதிவுகளிலும் படிக்க நேர்வதை இங்கே இட முயல்வேன்.

6) இந்த வலைப்பூவுக்குப் பின்னூட்டமிட வசதி இராது என்பதால், இதே பதிவை எனது மற்றைய வலைப்பதிவிலும் இடுகிறேன். இதை மேலும் சீர்ப்படுத்தவோ, நன்றாகச் செய்யவோ, தேவையில்லை எனவோ கருத்துக் கூற விரும்புபவர்கள் அங்கே பின்னூட்டமிடலாம். அந்தப் பதிவுக்கும் இந்தத் தளத்தில் இணைப்புக் கொடுக்கப்படுமென்பதால், பின்வரும் நாட்களில் ஆட்சேபணைகள் இருப்பவர்களும் அங்கேயே பின்னூட்டமிட்டால், பயாஸ்கோப்பு வலைப்பூவிலுள்ள பதிவுகளை நீக்கிவிடமுடியும்.

முன்பே இதுகுறித்துப் பேசியிருப்பதால், ஆட்சேபிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில், நாராயணனின் ஒரு பதிவையும், எனது சில பதிவுகளையும் மாதிரிக்கு இடுகிறேன். அதன் textஐ வாசகர்கள் படிக்கமுடியுமே தவிர, அதன் சுட்டிகளை உபயோகிக்கவோ, பின்னூட்டம் இடவோ முடியாது. சுட்டிகளைத் தொடரவேண்டுமெனிலோ, பின்னூட்டம் இடவேண்டுமெனிலோ அசல் வலைப்பதிவுகளுக்குத்தான் வந்தாகவேண்டும். அந்தவகையில், பதிவுகள் வாசிக்கப்படவேண்டும் என்பதே பிரதான நோக்கம், site hit எண்ணிக்கை மட்டும் நோக்கமில்லை எனின், இது ஒரு அனுகூலமே: உங்கள் பதிவு அங்கோ இங்கோ - படிக்கப்பட வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட விருப்பத்தினாலும், பொது உபயோகத்துக்குச் சுலபமாக இருக்குமென்ற எண்ணத்தினாலும் மட்டுமே இதைத் தொடங்க உத்தேசம். மற்றப்படி ஒவ்வொருவருடனும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் இருக்காது என்பதால், உங்களது பதிவுகளை நான் உபயோகித்திருப்பது உங்களுக்கு ஆட்சேபமெனில், எனது அசல் வலைப்பதிவின் சமீபத்தைய பதிவில் பின்னூட்டம் இடவும். மற்றப்படி, இது எந்தவிதத்திலும் யாருடனும் உரசலை ஏற்படுத்தும் என்றால், உடனுக்குடன் கடை இழுத்துச் சார்த்தப்படும் - அதுவரையிலான என் நேர விரயம் தவிர, யாருக்கும் நஷ்டமிராது.

This page is powered by Blogger. Isn't yours?