Friday, April 22, 2005

Spring, Summer, Fall, Winter... and Spring: நான்கு பருவங்கள்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: தங்கமணி

Image hosted by Photobucket.com

படத்தில் பேசப்படுகிற வசனங்களை ஒரு A4 அளவு பேப்பரில் எழுதிவிடலாம். நடிகர்கள் மொத்தம் 8 பேர் மற்றும் சில உயிரினங்கள். படம் மொத்தமும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது 5 பருவங்களையும் ஒரு வாழ்க்கையையும், மனிதனின் மொத்த துயரத்தையும், அதைக் கடக்கும் வழியையும் உங்கள் முன் 103 நிமிடங்களில் சொல்கிறது. படம் முழுவது தொடர்ந்து கோர்க்கப்பட்ட குறியீடுகளாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. என்னை பாதித்த மிகச் சில படங்களில் ஒன்றென இதையும் சொல்வேன்.

நான் குறியீடு என்று குறிப்பிடுவது குறித்து ஒரு உதாரணத்தைத் தரவிரும்புகிறேன். அந்த விகாரையில் இருக்கும் ஒரே அறையில் குருவும் சீடனும் படுப்பதற்கு ஒரு பக்கத்தில் இடமும், விருந்தினர்கள் படுப்பதற்கு மறு பக்கத்தில் இடமும் இருக்கும். இந்த இடங்களுக்கு செல்ல ஒரு நிலையும், கதவும் உண்டு; ஆனால் அதைத்தவிர பக்கத்தடுப்புகள் எதுவுமிருக்காது. (அதாவது அந்த கதவின் வழியன்றியும் அந்த இடத்தையடையலாம்)

மலைகளும், வனங்களும் சூழ்ந்த பள்ளத்தாக்கில் இருக்கும் ஏரியின் நடுவில் அமைந்த மரத்தாலான சிறு புத்தவிகாரை. அதில் காட்சிக்குத்தகுந்தாற்போல மெளனம் பேசும் ஒரு பழைய, சாதாரண புத்தர் சிலை. ஒரு குரு, ஒரு குழந்தைச்சீடன், ஒரு சேவல், ஒரு பூனை. கரைக்கு செல்ல ஒரு படகு. சீடனும் குருவும் மூலிகைகளை பறிக்கச்செல்கின்றனர். சீடன் அருவியின் அருகில் இருக்கும் குட்டையில் மீனைப்பிடித்து அதைக் சிறு கல்லுடன் கட்டி நீந்தவிடுகிறான். அது நீந்தமுடியாமல் தவிக்கிறது. ஒரு தவளையையும் பாம்பையும் அவ்வாறே செய்கிறான். அவைகள் சிரமப்பட்டு நகர்ந்து செல்கின்றன. அதைக் கண்டு குழந்தை குதுகலிக்கிறது; குரு இதைக் காண்கிறார். விகாரைக்குத் திரும்பும் குருவும் சீடனும் மூலிகைகளை வகைப்படுத்துகிறார்கள். பின் இருவரும் உறங்கச்செல்கிறார்கள். காலையில் எழுந்த குழந்தை நடக்கமுடியாமல் சிரமப்படுகிறான். ஒரு பாறாங்கல்லை குரு அவனோடு பிணைத்துவிடுகிறார். அவன் அதை விடுவிக்கக் கோருகிறான்.

அவர் கேட்கிறார்; ஒரு மீனை நீ கல்லோடு பிணைத்து விட்டாயா?
ஆம் குருவே!
ஒரு தவளையை?
ஆம் குருவே!
ஒரு பாம்பையும் கல்லைக்கட்டி விட்டாயா?
ஆம் குருவே!

அவைகள் எவ்வாறு துயருறும் என்று உணர்ந்தாயா? அவைகளை விடுவித்துவா. உன்னையும் இந்தக்கல்லில் இருந்து விடுவிக்கிறேன். ஆனால் அவைகளில் எவையேனும் இறந்திருந்தால் அந்தக் கல்லின் கணம் நீ இறக்கும் வரை உன் இதயத்தின் மேலிருந்து அழுத்தும் என்பதை நினைவிற்கொள் என்று அனுப்புகிறார். சிறுவன் கல்லோடு கரைக்குச்சென்று மீனைப்பார்க்கிறான். அது இறந்திருக்கிறது; தவளையை விடுவிக்கிறான். பாம்பும் இறந்திருக்கிறது. சிறுவன் துயரில் அழுகிறான்.

Image hosted by Photobucket.com

ஒரு கோடைகாலம். சிறுவன் இப்போது இளைஞன். ஒரு தாயும் அவளது நோயுற்ற இளம் மகளும் வருகிறார்கள். மகள் குணம் பெறுவதற்காக அங்கேயே இருக்கிறாள். இளைஞன் அவளால் கவரப்படுகிறான். பெரும் புயலென வீசும் காமம் அவனை அலைக்கழிக்கிறது.

இலையுதிக்காலம், அவளோடு அவன் உறவுகொள்கிறான். உறவு புதிய கதவுகளை திறக்கிறது. அவளது நோய் குணமானாகிறது. குரு அவனை இது இயற்கையானது என அனுமதிக்கிறார். ஆனால் அவளை ஊர்திரும்பச் செய்கிறார். காதலின் தணலில் தவிக்கும் அவன் புத்தர் சிலையை எடுத்துக்கொண்டு அவளைத்தேடி வெளியேறுகிறான். ஆண்டுகள் பல கடந்த ஒரு இலையுதிர்க்காலத்தில் அவன் திரும்பவருகிறான் ஒரு கொலைக்குற்றவாளியாக. அவளை அவன் கொன்றுவிடுகிறான்.

Image hosted by Photobucket.com

குரு அவனிடம் கேட்கிறார்:

ஏன் அவளைக் கொன்றாய்?

அவளை நான் நேசித்தேன். ஆனால் அவள் என்னை நேசிப்பதாகச் சொல்லிவிட்டு இன்னொருவனையும் நேசித்தாள் என்று கோபத்தில் கத்துகிறான்.

அது உனக்கு இவ்வளவு துயர் தருகிறதா என்கிறார் குரு. முன்பு அவன் எப்படி காதலில் தவித்தானோ அதே அளவுக்கு கோபத்திலும், குற்ற உணர்ச்சியிலும் தவிக்கிறான். துரோகம், கொலை, பாவம் போன்ற உணர்ச்சிகளில் தன்னை மாய்த்துக்கொள்ள முனைகிறான். அவனை குரு கடுமையாக அடித்து அம்முயற்சியைத் தடுக்கிறார். புத்த விகாரையின் மரத்தளத்தில் ஒரு புத்த சூத்திரத்தை எழுதி, அதை அவன் கொண்டுவந்த கத்தியாலேயே செதுக்கச்சொல்கிறார். அப்போது கவனி உன் கோபமும், வெறுப்பும் மறைவதை என்கிறார். அவன் அதைச் செதுக்கத் தொடங்குகிறான்.

அவனைத் தேடி காவல்துறை வருகிறது. அவர்களை அவன் செதுக்கிமுடியும்வரை, அடுத்த நாள் காலை வரை காத்திருக்கச் சொல்கிறார் குரு. வன்மமும், கோபமுமாய் இருக்கும் அவனும், காவல்துறையுயினரும் எதிர்ப்பவர் இன்றி தங்கள் அடையாளங்களில் இருந்து கழன்று வெறும் மனிதர்களாய் இருக்கும் காட்சி மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது. Effortless effort-ஆக ஒரு அதிசயம், பூ மலர்வதுபோல் நிகழ்கிறது. மனிதன் அடையாளங்களை தன்னைச் சுற்றி தானே பிணைத்துக்கொள்கிறான்; அவைகள் அவனை தளைப்படுத்துகின்றன. தானே தளைப்பட்டு சஞ்சலப்படும் மனிதனை மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு குளிர் காலத்தில் சிறையில் இருந்து வரும்போது குரு இந்த உலகத்தில் இருந்து போய்விடுகிறார். அவரது மரணம் ஒரு அழகான ஜென் கதையை நினைவுபடுத்துகிறது. அவன் தன்னை பயிற்சிகளின் மூலம் தயார்ப்படுத்திக்கொள்கிறான். அப்போது ஒரு கைவிடப்பட்ட பெண் தன் கைக்குழந்தையுடன் அங்கு வந்து குழந்தையை அங்கு விட்டு விட்டு வெளியேறும் போது இந்தச் சீடன் வெட்டி வைத்திருந்த பனிக்குழியில் விழுந்து இறந்துபோகிறாள். குற்ற உணர்ச்சியால் மறுபடியும் வதைபடும் சீடன் ஒரு கல் சகடையை தன்னோடு கட்டிக் கொண்டு கையில் ஒரு புத்தர் சிலையோடு உயர்ந்த மலையை சிரமப்பட்டு ஏறி உச்சியையடைகிறான். அங்கு அந்தக்கல்லை வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்கிறான். பின் அமைதியாக விகாரைகுத் திரும்புகிறான். இன்னொரு முறை அவனே பினைத்துக்கொண்ட அந்த பாரம் அங்கு மலைமேலேயே இருக்கிறது. அந்த பாரத்தை அவன் சாட்சியாய் இருப்பதன் மூலம் துறப்பதை அந்தக் கல்லின் மேல் அந்த சிந்திக்கும் புத்தர் சிலையை வைத்து தொலைதூரத்தில் தெரியும் விகாரையைக் காட்டுவதன் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பின் மறுபடியும் வசந்தம் வருகிறது. மறுபடியும் ஒரு குருவும் ஒரு குழந்தைச்சீடனும் இருக்கிறார்கள்.

Image hosted by Photobucket.com


ஒரு ஜென் கதை all forms are forms என்று ஒரு புத்த சூத்திரத்தை உடைத்து எழுதப்பட்டிருக்கும். அதை நினைவுபடுத்தும் விதமாக அந்த கைவிடப்பட்ட அபலையின் முகம் மறைக்கப்பட்டிருக்கும். அந்த சீடன் இந்தப்பெண் இறந்தவுடன் தன்கையில் ஒரு புத்தர் சிலையுடன் ஒரு கற்சகடையுடன் மலையேறுவது என் பார்வையில் மிக அற்புதமான குறியீடாக இருந்தது. தானே தளைப்படுத்திக்கொண்டவன் தன் இருப்பிடத்தை
விட்டு விலகி சாட்சியாய் இருப்பதற்கான முயற்சியாக அந்த மலையேற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவன் மலைஉச்சியை அடைந்த உடன் அந்த கற்சகடையின் மேல் புத்தர் சிலை இருப்பதாகக் காட்டுவது, ஒருவன் சாட்சியாக மாறும் கணத்தில் அவனது தளைகளை ஆளுகிற சாட்சியின் வடிவமாகக் காட்டுவது, புத்தவிழிப்புணர்வை அழகாகக் காட்சிப்படுத்திவிடுகிறது.

இந்த நேரத்தில் தமிழ்ப்படங்களில் கடவுள் வரும் காட்சிகள், மஞ்சள், சிவப்பு வெளிச்சங்களில் விழித்த அம்மன் முகம் சுற்றும் காட்சிகள் எல்லாம் பக்திப்படங்களில் காட்டப்படுவது இந்தப்படமெல்லாம் பார்த்து முடித்துவிட்டு மறுநாள் எங்கேயோ நடந்துகொண்டிருக்கும் போது நினைவில் வந்து தொலைத்தது.

பார்வையாளனுக்கு அதிகபட்ச சுதந்திரத்தை கொடுக்கும் வகையில் வசனங்களை மிகக்குறைவாகவும், காட்சிகளை மிகச்செறிவாகவும் அமைத்திருப்பது பார்வையாளனுக்கு ஒரு நல்ல காட்சி அனுபவத்தைத் தருகிறது.

This page is powered by Blogger. Isn't yours?