Friday, April 22, 2005

The day my God died: என் கடவுள் இறந்த நாள்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: பெயரிலி


Andrew Levine இன் The Day My God Died (2003)


முந்தநாட்பின்னிரவா அல்லது நேற்றின் முன்னிரவா என்று தெரியாத அகால வேளையிலே, சாய்கதிரைச்சோம்பேறிகளின் கைக்கான பயிற்சியைத் தொலைக்காட்சித் தொலைக்கட்டுப்படுத்தியிலே செய்துகொண்டிருக்கையிலே, நியூ ஹம்ஸயர் PBS வரிசையிலே விழுந்தது, "The Day My God Died." மீரா நாயரின் Salom Bombay படத்தினை, ஆழமாகவும் இற்றைப்படுத்தியும் எடுத்ததான விவரணம் என்று சொல்லலாம். PBS இன் Independence Lens நிகழ்ச்சிகள் பரந்து பட்ட பிரச்சனைகளை அணுகுகின்றவை; புதிதாகக் கிளம்பும் ஆர்வமும் உத்வேகமுள்ள தனியாட்களாலே இயக்கப்படுகின்றவை. அந்த வரிசையிலே, நேபாளத்திலிருந்து மு/பம்பாய் சிவப்புவிளக்குப்பிரதேசத்துக்குக் கடத்தியோ ஏமாற்றியோ கொண்டுவரப்படும் "கமலா"க்களிலே சிலரின் கதைகளையும் அவர்களை மீட்டெடுக்கும் அரசுசாராத் தன்னார்வ இயக்கங்களையும் அதன்பின்னான இவர்களின் வாழ்க்கையையும் வயதுகளையும் வருத்தங்களையும் குறித்துப்பேசும் படம்.

குறைந்தது முப்பதாண்டுகளாக இதுபோல, எத்தனையோ படங்களைப் பார்த்தும் கதைகளைக் கேட்டுமிருக்கின்றோம் (இந்த ஆண்டுத்தொடக்கத்திலே TV5 என்ற பிரெஞ்சு அலைவரிசையிலேயும் இப்படியான ஒரு விவரணம் அ(தி)கா(¨)லகைப்பயிற்சியின்போது அகப்பட்டது; எண்பதுகளிலே எடுக்கப்பட்ட பம்பாயின் மூன்றோ நான்கு சிவப்புவிளக்குப்பகுதிப்பெண்களின் வாழ்க்கை குறித்தவிவரணம்). ஆனால், இங்கே இந்த "The Day My God Died" எவ்வாறு மற்றைய படங்களிலேயிருந்து வித்தியாசப்படுகின்றதென்றால், இது குறிப்பாக, அண்மைக்காலத்திலே உலகலாவியநிலையிலே அதிகரித்திருக்கும் பாலியற்றொழிற்சந்தை, பாலியற்றொழிலடிமைகள் குறித்து மும்பாயின் நிலையை மையமாக வைத்து ஓர் இற்றைப்படுத்தலைச் செய்திருக்கின்றது; அதிலும், அண்மைய பிரச்சனைகளான, சிறுமிகள் மீதான பாலியல்வன்முறை, விளைவான எயிட்ஸ் பரவுகை, இந்நிலையிலிருந்து தப்பிய சிறுமிகளுக்கான தஞ்சமும் எதிர்காலமும் போன்றவற்றினையும் ஓரளவுக்கு தன்னெல்லைக்குட்பட்ட அளவிலே அலசுகின்றது. குறிப்பாக, இந்தப்படத்திலே அமெரிக்கப்புலனாய்வுவிவரணங்களிலே பயன்படுத்தப்படும் உத்திகளான குற்றக்களங்களிலே பங்காளிகள் அறியாது குற்றத்தினையும் பேச்சுகளையும் பதிவுசெய்தல், சட்ட உதவியோடு அகப்பட்டாரை விடுதலை செய்தல் போன்றவைகளும் உள்ளடங்கியிருப்பது ஒரு சிறப்புத்தன்மை எனலாம். ஆனாலும், இவையெல்லாம் பரந்த பெருங்கடலிலே ஓரிரு சிறுமீன்களைப் பிடிக்கும் படத்துக்கான காட்சிச்சித்திரங்களாக மட்டும் அமைத்திருக்குமோ என்ற சோர்வும் எழாமலில்லை.

விவரணத்திலே நம்பிக்கை தருவதாக உள்ளது, நேபாளத்தின் அனுராதா கொய்ராலா (மனிஷா, க்ரிஜா ப்ரஸாத் ஆகியோருக்குச் சொந்தமோ?) நடத்தும் விடுவிக்கப்பட்ட பெண்களுக்கான மைத்தி நேபாள் அமைப்பு, விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் எதிர்காலத்தினை, சமூகத்திலும் தனிப்பட்ட அளவிலும் எதிர்கொள்ளப் பக்குவப்படுத்தவும் பலப்படுத்தவும் செய்கின்ற அதேநேரத்திலே, அவர்களையே வருங்காலத்துச்சிறுமிகளுக்கு இப்படியான நிலைமைகள் வராது தடுக்கும் செயற்பாடுகளிலும் ஏற்கனவே சிறைப்பட்டுக் கிடக்கின்றவர்களைத் தப்பவைக்கும் செயற்பாடுகளுக்கு உதவியாக இருக்கவும் பயன்படுத்துகின்ற நிலைதான். பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதற்கான தீர்விலும் அதுபோன்ற அவலநிலை மற்றோருக்கு நிகழாது உதவும் உத்வேகத்தினைத் தரவும் சுயமரியாதையை மீட்டுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தவும் செய்யுமென்பதைக் கண்டு பயன்படுத்துகின்றார்கள். பதினொரு வயதுச்சிறுமி ஒருநாளிலே இருபது முப்பதுபேர் வல்லுறவு கொள்ளும் நிலையைச் சொல்வதும் தப்பியபின்னும் தஞ்சம் புகுமிடமின்றி அவப்படுதலும் விளைவான எயிட்ஸிலே அல்லலுறுவதும் இங்கே எதிர்பார்க்கின்றபோதுங்கூட, ஒரு நடுக்கத்தினை ஏற்படுத்தவே செய்கின்றது. இன்னொரு பெண் தனது வாழ்வு இவ்வாறு அவப்பட்ட முதல்நாளைப் பற்றிக் கூறுவதே விவரணத்துக்கும் தலைப்பாகின்றது; "The Day My God Died." மிகவும் ஆத்திரமூட்டும் நிலையானது, விடுதலை செய்யப்பட்ட ஒரு பெண் நேபாளத்திலே தனது கிராமத்துக்கு வசிக்கச் செல்கின்றபோது, தனக்கு நிகழ்கின்ற அவலத்தினைக் கூறுதல்; "தன்னை ஒரு வேண்டா அருவருப்புக்குரிய பொருளாகக் கணித்து ஒதுக்கும் சமூகம், தன்னை ஏமாற்றி மும்பாயிற்கு வியாபாரத்துக்குக் கொண்டு போன அதே ஊரிலே இருக்கும் பெண்ணை எதுவுமே சொல்வதில்லை என்பதும் அந்தப்பெண்ணுக்கு எதிராக தன்னாலோ தன் குடும்பத்தினராலோ எந்தச் சட்டநடவடிக்கையுமே வெற்றிகரமாக எடுக்கமுடியவில்லை" என்கிறார். வருந்தவா, ஆத்திரப்படுவதா என்ற குதம்ப உணர்வு தந்த ஒரு காட்சி - ஒரு பாலியற்றொழிற்கூடத்தின் உரிமையாளரான பெண், தான் முன்னர் இந்தப்பெண்களை வருத்தியது உண்மையென்றாலுங்கூட, இப்போது தான் திருந்திவிட்டதாகவும் இரண்டு காசு ஒரு பெண் உழைத்தால், ஒன்று அவளுக்கு அடுத்தது தனக்கு என்று இருப்பதாகவும் சொல்லி, முடிக்கின்றார், "புரிந்து கொள்ளுங்கள் பாபு; நானும் ஒரு மனித ஜீவிதான் என்பதை."

விவரணத்திலே ஒரு மூன்றாமுலகம் சார்ந்த் பார்வையாளருக்கு உறுத்தும் சில காட்சிகளும் உண்டு; குறிப்பாக, அடிக்கடி தோன்றிய இரண்டு; ஒன்று, எப்போதுமே ஒன்றோ இரண்டோ வெள்ளைநிறத்தவர்கள்/மேற்குலகுசார் அமைப்பினர் காட்சியிலே உடனிருக்கையிலே எந்தச்சிக்கலுமின்றி, பெண்கள் காக்கப்படவும் விரும்பியபடியே பெண்கள் தப்பும் நிகழ்வுகளை நடத்தவும் முடிகின்றது; ஆனால், இப்படியான சுப்பர்மென் அருகிலே இல்லாத மீதிச்சந்தர்ப்பங்களே உள்ளூர் பெண்களமைப்பினாலே எந்தளவு வெற்றிகரமாகச் செயற்படமுடியுமென்பது. இரண்டாவது, பதினொன்றும் பதினாறுமென்ற வயதுள்ள விடுவிக்கப்பட்ட பெண்களைச் செவ்வி காணும்போது, விவரணத்திலே அவர்கள் முகங்களை மிகவும் வெளிச்சமாகவே காட்டுகின்றனர். இப்படியான நிலை பொதுவிலே மேல்நாடுகளிலே நிகழ்கின்றபோது அமைவதில்லை; ஆளின் தனிப்பாட்டினை முன்னிறுத்தி, ஆளைத் தெளிவாகக் காட்டாமலே விவரணப்படுத்துவார்கள் (மேரிலாண்ட் பகுதிகளிலே குறிபார்த்துச் சுட்டுக்கொண்டு திரிந்த இளைஞனின் முகம், வலைப்பந்தாளர் வன்புணர்ந்ததாகச் சொல்லப்படும் பெண்ணின் தோற்றம், ஏன் விபரங்கூட சட்டரீதியாக அமுக்கப்பட்டே இருந்தது). ஆனால், இந்தப்பெண்களை இப்படியாக காட்டுவது எவ்விதத்திலே அவர்களுக்கு நலம் பயக்கும் (ஏற்கனவே நேபாளத்திலே அவர்களின் நிலை மிக ஒதுக்கப்பட்டது). இப்படியான இரட்டைநிலை ஆபிரிக்காவினைக் காட்டும்போதும் நிர்வாணம் குறித்தவிதத்திலே மேற்கத்தையப்படங்களிலே இருக்கின்றது; ஜெனட் ஜக்ஸனின் மார்பு தெறித்துத் தெரிந்தால், அது அசிங்கமாகின்றபோது, ஆபிரிக்கப்பெண்களினை ஆடையின்றிக் காட்டுவதிலே அத்துணை சங்கடப்படுவதில்லை (இந்நிலை குறித்த ஆபிரிக்கக் கருத்துநிலை ஒன்றுமிருக்கின்றது; ஆனால், இங்கே அது பேசும் விவரணத்துக்கு அப்பாலான பேச்சென்பதாலே விட்டுவிடலாம்).

ஆனால், இப்படியான விவரணங்களிலே இதுவரை பேசப்படாத பார்வை, இப்படியான ஆட்கடத்தல்களை ஏமாற்றல்களைச் செய்யும் இடைத்தரகர்களினது; இந்த விவரணம், அப்படியான ஒருவரைப் பிடித்து "உன் குழந்தை என்றால், இப்படியாகச் செய்வாயா? இனிமேலே செய்யாதே" என்று மைதி அமைப்பாளர் கொய்ராலா சொல்வதோடு நின்றுவிடுகின்றதேயழிய, அவர்களினை தொடர்வதும் அவர்களின் உட்கிடக்கைகளை அறிவதும் மாற்றுவதுங்குறித்துப் பேசுவதில்லை. இந்த ஆண்டு CNN இன் Aaron Brown இனின் ஞாயிறிரவுச்சிறப்புநிகழ்ச்சியொன்றும் இதுபோலவே, ருமேனியச்சிறார்களின் மீதான பாலியற்குற்றங்களைப் பின்தொடர்ந்து சென்ற விவரணத்தினைத் தந்திருந்தது. ஆனால், அதுகூட, அதற்குமேலே எதையும் ஆழமாகப் பார்க்கவில்லை. இந்தக் குற்றவாளிகளின் செயற்பாட்டின் கோணத்திலே இப்படியான அவத்தன்மைக்காளாகியிருக்கும் நாடுகளிலே ஆய்வு செய்யப்படவேண்டும்; விவரணங்கள் வரவேண்டும்.

பொதுவிலே, இந்த விவரணம், (நாம் ஏற்கனவே) அறிந்ததை உலகறியச் சொல்லும் நேரத்திலே, விபரங்களை இற்றைப்படுத்தவும் உதவியிருக்கின்றது.

THE DAY MY GOD DIED
விவரணை:
Tim Robbins & Winona Ryder
தயாரிப்பும் இயக்கமும்:
Andrew Levine
கறுப்பு-வெள்ளையும் நிறமும்/விவரணம்/70 நிமிடங்கள்/ஆங்கிலம்


This page is powered by Blogger. Isn't yours?