Friday, April 22, 2005

Rififi: ரிஃபிஃபி

அசல் பதிவுகளுக்குச் செல்ல இங்கே சுட்டுக: அல்வாசிட்டி விஜய்


க்ளாசிக் உலகத் திரைப்பட வரிசையில் என்னால் முடிந்த அறிமுகம் ஜீல்ஸ் டாசின் (Jules Dassin) இயக்கத்தில் 1954-ல் ஃப்ரஞ்ச் மொழியில் வெளிவந்த 'ரீஃபீஃபீ' (RIFIFI). இந்த படத்தின் இயக்குனர் பற்றியும்(இவருக்கு பின் ஒரு கதையே இருக்கிறது),படத்தை பற்றியும் ஒரு சின்ன அறிமுகம் உங்களுக்காக.

Rififi படத்தைப் பற்றி:

முக்கியமாக புதிய படங்கள் பார்த்து பழக்கப்பட்ட நமக்கு திடீரென பழைய படங்களைப் பார்த்தால் ருசிப்பதில்லை. ஏனெனில் அதே காட்சிகளை தற்கால படத்தில் பிரமாண்டத்துடன் கலரில் பார்த்து சுகித்திருப்போம். இருந்தாலும் சில படங்கள் காலத்தை வென்று நிற்கும். அதைப் போல் இன்னொன்று இன்னும் வரவில்லை என சில பழையன பேசும். அதில் ஒன்று Rififi என்ற பிரஞ்சு படம்.

ஒன்றைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கருப்பு வெள்ளை கேமிராவில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போது தற்காலத்து வண்ண படங்களையும் மிஞ்சி காட்சிகள் நம்மை கவருகின்றன ஏன்? நல்ல கதையோட்டமும், காட்சி அமைப்புகளும் இருந்தாலே வண்ணங்களை மீறி நம் மனதில் அந்த காட்சி இடம் பிடிக்கின்றன.

இந்த படம் நாம் நிறைய படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட அதே கொள்ளைக் கூட்ட படம் தான். 4 கொள்ளையர்கள் எப்படி நகைக்கடையை கொள்ளையடிக்கிறார்கள், அதை தொடர்ந்து நிழல் உலகத்தால் ஒவ்வொருவரும் எப்படி அழிகிறார்கள் என்பதை 1954-ல் கொடுத்திருக்கிறார்கள். முதலில் ஜவ்வென்று இழுத்தப் படம் இடையில் விறுவிறுப்பைக் கூட்டி நிமிர்ந்து உட்கார வைத்தது. 4 கொள்ளையர்கள் முன் தீட்டப்பட்ட திட்டத்துடன் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை 33 நிமிடங்களாக அவர்கள் மூச்சி விடும் சத்தத்தை தவிர எந்த ஒலியும் இல்லாமல் ஒருவருக்கொருவர் கண்களால் ஜாடை செய்தே காரியத்தை கணகச்சிதமாக முடிக்கும் காட்சி ஒன்றே போதும் இது சிறந்தப் படமென பறைசாற்ற.

இயக்குனர் ஜீல்ஸ் டாசின்:

அமெரிக்காவில் க்ரைம் படங்களின் வளரும் இயக்குனராக 1940-களில் திகழ்ந்தவர்.அவருடைய 'Brute Force','The Naked city' படங்கள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி House Un-American Activities Committee-ஆல் கம்யூனிஸ்ட் என்று முத்திரைக் குத்தப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளானார். 1949-ல் அவர் கடைசியாக இயக்கிய படம் 'The Naked city' அதற்கு அப்புறம் 1954-ல் Rififi படத்தின் வாயிலாக ஐரோப்பாவில் புகழடைந்தார். 1949-க்கும் 1954-க்கும் இடைப்பட்ட சமயத்தில் அவர் ஹாலிவுட்டால் அடைந்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கையில் காசின்றி ஏழ்மையில் வாழ்ந்த அவருக்கு ஐரோப்பாவிலும் படவாய்ப்புகள் தர எவரும் முன் வரவில்லை. படங்கள் ஒப்பந்தம் ஆனாலும் ஹாலிவுட் டாசின் பெயர் தாங்கி வரும் எந்தப் படமும் அமெரிக்காவில் விற்க முடியாதென மிரட்டியதால் பல கம்பெனிகள் பின் வாங்கின. இருந்தாலும் துணிந்து ஒரு பிரஞ்சு கம்பெனி 1954- Rifif வழியாக வாய்ப்பு அளித்ததும், புகழின் உச்சியில் ஏற ஆரம்பித்தார். கேன்ஸ் (Cannes) திரைப்பட திருவிழாவில் சிறந்த இயக்குனராக பரிசைப் பெற்றார். ஜீல்ஸ் டாசினும் பெர்லோ விட்டா என்ற மாற்றுப் பெயருடன் நடித்துள்ளார். படத்தில் முகம் காட்டி நிற்பவர் ஜீல்ஸ் டாசினே.


இந்த படத்தைப் பற்றிய மேல் விவரங்களுக்கு http://www.filmforum.com/rififipress.html

This page is powered by Blogger. Isn't yours?