Sunday, April 24, 2005

Osama

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: கறுப்பி

Winner of two awards at the 2003 Cannes Film Festival
Osama Directed By: Siddiq Barmak
Afghanistan/Japan/Ireland, 2003


தலிபான் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது. அப்படியானால் ஆண்கள் இல்லாத குடும்பத்தின் நிலை? இதனை மையமாக வைத்து வெளிவந்திருக்கின்றது “ஒசாமா” எனும் ஆப்கான் திரைப்படம்.
தனது கணவனை கபால் போரிலும் சகோதரனை ரஷ்யப் போரிலும் இழந்து விட்டு பாட்டி, 12 வயது மகள் என்று ஆண் துணையின்றித் தனித்து நிற்கின்றாள் தாய். பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்ற தலிபான் ஆட்சியின் கீழ் வீட்டிற்கு உணவிற்காக மகளை ஆண் பிள்ளை போல் மாற்றி வேலைக்கு அனுப்பு என்ற பாட்டி கூற முதலில் மறுத்தாலும் வேறுவழியின்றித் தனது மகளை ஆண் போலாக்கி “ஒசாமா” என்று பெயரிட்டு குடும்ப நண்பர் ஒருவரின் கடைக்கு வேலைக்கு அனுப்புகின்றாள்.

மருண்ட கண்களுடன் வேலைக்குச் செல்லும் ஒசாமா வேலை முடிந்ததும் முதலாளி கொடுக்கும் உணவுப் பொருட்களுடன் வீட்டிற்கு ஓடி வந்து சேர்ந்து விடுவாள். தலிபான்களின் கையில் அகப்பட்டால் மரணதண்டனை நிச்சயம் என்பது அவளுக்குத் தெரியும்.
தலிபான்களால் அனைத்து சிறுவர்களும் இராணுவப்பயிற்சிக்கும், குர்ரான் படிப்பதற்கு அழைக்கபடுகின்றார்கள். வேறு வழியின்றி ஒசாமாவும் செல்கின்றாள். அவளை பெண் என்று தெரிந்த அவள் வீட்டிற்கு அண்மையில் இருக்கும் ஒரு சிறுவனைத் தவிர அனைத்துச் சிறுவர்களும் ஒசாமாவை பெண் போல மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறான் என்று கேலி செய்கின்றார்கள். அவர்களின் கேலிப்பேச்சிலிருந்து அந்தச் சிறுவன் ஒசாமாவைக் காப்பாற்றுகின்றான். ஆனால் எவ்வளவு காலத்திற்கு?
சிறுவர்களுக்கு குளிக்கும் முறை காட்டிக் கொடுக்கப்படுகின்றது. உடைகளைக் களைந்து விட்டு தண்ணீர்த் தொட்டிக்குள் ஏறியிருந்து ஆண் குறியைக் கழுவும் முறை சொல்லிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒசாமா அவர்கள் கண்களின் படாமல் ஒளித்துக் கொள்கின்றாள். ஆனால் சிறுமிதானே ஆர்வ மிகுதியால் தலையை நீட்டிப்பார்க்க அவளையும் அழைத்துக் குளிக்கும் படி உத்தரவிடுகின்றார்கள். இது இப்படத்தின் ஒரு முக்கிய காட்சி ஆனால் மிகவும் எளிதாக ஒசாமா மேல் சட்டையை மட்டும் களைந்து விட்டுத் தண்ணீருக்குள் போகின்றாள். 12 வயதுச் சிறுமியான அவள் மார்பகங்கள் தட்டையாக ஒரு ஆணைப் போல இருக்கின்றன. இது எப்படிச் சாத்தியம் என்று கேள்வி கேட்காமல் திரைப்படத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம்.
சில தினங்களின் பின்னர் அவளை சிறுவர்கள் “நீ உண்மையிலேயே ஒரு ஆண் எனில் துணிவாக மரத்தில் ஏறு” என்று கட்டளை இட அவள் துணிந்து ஏறுகின்றாள். ஆனால் உச்சிக்குப் போன பின்னர் பயந்து தன்னை இறக்கி விடும் படி அழுதவளுக்கு அருகில் தலிபான் மேற்பார்வையாளர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு அவள் ஒரு பெண்ணோ என்ற சந்தேகம் எழுந்த போது அங்கிருந்து தப்புவதற்காக அவள் ஓடுகின்றாள். சிறுவர்கள் கூச்சலுடன் ஓடிச்சென்று ஒசாமாவைப் பிடித்து வர அவள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு கிணற்றுக்குள் இறக்கப்படுகின்றாள். வாய்விட்டுக் கதறிக் கதறி தாயைக் கூப்பிடும் அவளை வெளியே எடுக்கின்றார்கள் அவள் தொடைகளிலும் கால்களிலும் இரத்த ஓட்டம். இந்த இரத்த வெளியேற்றம் பெண் என்பதை நிச்சயப்படுத்த அவள் சிறையில் அடைக்கப்படுகின்றாள்.


சிறையில் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்த பல ஆப்க்கான் பெண்கள் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தீர்ப்புக்கான நாள் ஒன்றில் பெண்கள் வேலைக்குச் செல்ல உரிமை வேண்டும் என்று போராட்டம் நடாத்திய போது அங்கு சென்ற வெள்ளை இன நிருபர் ஒருவர் அந்தப் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ததற்காக முதலில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. பின்னர் “ஒசாமா”வை அழைக்கின்றார்கள். அவளுக்குத் தீர்ப்பு வழங்கும் முன்பு அவர்களின் குடும்ப நண்பன் ஒருவன் தலைவரிடம் அவளைக் கொல்லாது தாங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட போது அந்த வயது முதிர்ந்த தலைவர் அதற்கு ஒத்துக் கொள்கின்றார். அதனால் ஒசாமா உயிர் பிழைக்கின்றாள்.
அமெரிக்கா தலையிட்டு தலிபான் ஆட்சியை நீக்கியது இல்லாவிட்டால் ஆப்பானிஸ்தான் நிலை இன்னும் இப்படியேதான் இருந்திருக்கும் என்று ஒரு வெள்ளை இன ஆண் ஒருவர் பெருமை அடித்துக் கொண்டார்.

பெண்அடிமைத் தனத்தின் ஆரம்பம் மதங்களில் இருந்து உருவாகியிருக்கின்றது. இருந்தும் இஸ்லாம் மதத்தைப் போல் பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவது எந்த ஒரு மதத்திலும் காணப்படவில்லை. மாறாக வேறு எந்த ஒரு மதமும் மதக் கொள்கையில் இருந்து தம்மை நீக்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதுமில்லை. இஸ்லாமின மத மக்கள் மட்டுமே வேற்று மதங்களாலும் தம் சொந்த மதத்தினாலும் பாதிக்கப்படும் துர்பாக்கிசாலிகள் ஆகின்றார்கள். இஸ்லாம் மதத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஹொலண்ட் நாட்டில் சஞ்சம் புகுந்த சோமாலிய நாட்டுப் பெண்மணி ஹர்ஷி அலிக்கு அவர் தனது மதத்தின் மேல் கேள்வி எழுப்பியதற்காக இஸ்லாமிய மதத் தலைவர்கள் மரணதண்டனை விதித்துள்ளார்கள். மேலும் ஈழப்போராட்டத்தின் போது எம்நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு நடந்த கொடுமை யாவரும் அறிந்ததே.
“எம்மதமும் எனக்குச் சம்மதமில்லை"

This page is powered by Blogger. Isn't yours?