Friday, April 22, 2005

Un Chien Andalou

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மாண்ட்ரீஸர்



சரி, படம் பார்த்துப் பலநாளாயிற்றே என்று வீடியோக் கடையில் மேய்ந்துகொண்டிருந்தபோது Un Chien Andalou படத்தைப் பார்த்ததும் துள்ளி விழாத குறைதான். சில வருடங்களுக்கு முன்பு,இறுதி சில நிமிடங்களை மட்டுமே ஆமைவேக இணையத்தின் துணையுடன் ஒரு சாதாரணமான வீடியோ க்ளிப்பிங்கில் பார்த்ததுண்டு, மற்றப்படி அதன் மிகப் பிரபலமான முதல் காட்சி குறித்து எண்ணற்ற குறிப்புக்களையும் படித்ததுண்டு என்பதால், இம்முறை படம் பார்க்கும்போது அந்த முதல் காட்சி அதிரச்செய்யாது என்றே தோன்றியது. பதினைந்து சொச்ச நிமிடங்கள் மட்டும் ஓடும் இந்தப் படத்தின் முதல் காட்சி இப்படித் தொடங்குகிறது: இயக்குனர் லூயி புனுவெல், தொடர்ந்து புகைத்தவாறு ஒரு சவரக்கத்தியைத் தீட்டிக்கொண்டிருக்கிறார். சற்றுநேரம் தீட்டி முடித்தபின்பு தன் நகத்தை வெட்டி அதன் கூர்மையைச் சோதித்துக்கொள்கிறார். வலைக்கதவைத் திறந்து பால்கனிக்கு வருகிறார். அடர்ந்த வானத்தின் நடுவில் நிர்மல வெள்ளை வட்டமாக நிலவு. ஒல்லியாக நீண்ட சர்ப்பம் போன்ற ஒரு கறுத்த மேகம் வானத்தின் குறுக்காக நிலவைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஒரு பெண்ணின் முகம் திரையில் வெகுநெருக்கக் காட்சியாகத் (tight close-up) தோன்றுகிறது. அவளது இடக்கண்ணை புனுவலின் இடக்கை விரல்கள் நன்றாக விரிக்கின்றன, அவரது வலக்கையிலிருக்கும் சவரக்கத்தி அவளது கண்ணின் மிக மத்தியை ஒரேயொரு கீற்றலில் அறுக்கிறது. படக்கென்று விழிக்குள்ளிருக்கும் சதைக்கோளங்கள் பொத்துக்கொண்டு வந்து தொங்குகின்றன. அடுத்துக் காண்பிக்கப்படும் வானத்தில் வெள்ளை நிலவைக் கறுப்பு மேகம் கத்தி போல அறுத்துக்கொண்டு செல்கிறது.

தாஜ்மஹாலுக்குள் முதலில் நுழைந்தபோது, இத்தனை புகைப்படங்களில் பார்த்ததுதானே, புதிதாக என்ன தோன்றிவிடப்போகிறது என்ற அசிரத்தையுடனேயே நுழைந்தேன். ஆனால், அதன் வாயிலுக்கருகில் நின்றுகொண்டு அண்ணாந்து பார்த்தபோதுதான் எனது சிறுமையும் எறும்புத்துவமும் புரிந்தது. அதேபோல்தான் இப்போதும் இருந்தது. 1929ல் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட ஒரு பதினைந்துநிமிட அமெச்சூர் படம் கிட்டத்தட்ட 75 வருடங்கள் கழித்தும் ஒரு திரைப்பட ரசிகனை அதிர்ச்சியடையச் செய்கிறதென்றால் அது சாமானிய விஷயமல்ல. எஸ்.ராமகிருஷ்ணன், உலக சினிமா என்ற தொகுப்பு கொண்டுவருவதாகத் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தார். இந்தப் படம் குறித்தும் லூயி புனுவல் பற்றிய குறிப்புக்களும் அதில் நிச்சயம் இருக்குமென்பது என் நம்பிக்கை. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து முன்பு தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The eye of the serpent தவிர, குறிப்பிடத்தக்க வகையில் உலகத் திரைப்படங்களையும் தமிழ்த் திரைப்படங்களையும் குறித்த தொகுப்பு தமிழிலிலேயே வருவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பிற கலாச்சாரங்களின் திரைப்படங்களையும், அவர்கள் பார்வையிலான கலைவெளிப்பாடுகளையும் குறித்த எளிய அறிமுகங்களைப் பெறமுடிந்தாலே, ஆரம்பகட்ட உலகத் திரைப்பட ரசிகர்களுக்கும் திரைப்படங்களுக்கும் இடையிலான சரியான ஓர் இணைப்புப்பாலமாக அது இருக்கும்.

ஆந்தலூசிய நாய் என்று மொழிபெயர்க்கப்படக்கூடிய Un Chien Andalou எழுப்பிய கேள்விகள் கணக்கற்றவை. தொடக்கத்தில், சால்வடார் டாலி, லூயி புனுவல் இருவருக்கேற்பட்ட சில கனவுகளைக்கொண்டு இருவரும் விவாதித்து விவாதித்துச் செதுக்கிய சம்பவங்களின் காட்சிக்கோர்வைதான் இந்தக் குறும்படம். பாரிஸில் இது திரையிடப்பட்டபோது புனுவெல் திரைக்குப்பின் நின்றுகொண்டு ரிச்சர்ட் வாக்னரின் Tristan and Isolde இசைக்குறிப்பை ஆளியங்கி (manual) கிராமபோன் மூலம் பின்னணி இசைக்காகத் திரும்பத்திரும்ப இயக்கிக்கொண்டிருந்ததாகவும், படம் ஏகப்பட்ட எதிர்ப்புக்களைக் கிளப்பலாம் என்ற ஐயத்தில், தேவைப்பட்டால் கூட்டத்தின்மேல் எறியத் தன் கோட்டுப் பைகளிலும் கால்சராய்ப் பைகளிலும் பெரிய பெரிய கற்களைப் பொறுக்கி வைத்திருந்ததாகவும், திரையிடுதலுக்கு அப்போது பிரபலமடைந்துகொண்டிருந்த பிக்காஸோ, ழான் காக்டேயு, கார்ஸியா லோர்க்கா போன்றவர்கள் வந்திருந்ததாகவும் புனுவலின் மகன், பிந்தைய நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். பூர்ஷ்வாக்களைக் குமட்டவைக்கவும் அதிர்ச்சியடையச்செய்யவும் இந்தப் படத்தை எடுத்த புனுவலும் சால்வடார் டாலியும் பிற்காலங்களில் பிரபலமடைந்ததே பூர்ஷ்வாக்களின் ஆதரவாலேயே என்பது நிஜம் என்பதை நாம் அறிந்தாலும், புனுவலின் மகன் விவரிக்கும் சென்ட்ரல் பார்க்கில் சால்வடார் டாலியின் அமெரிக்க கெடில்லாக் கார்ப்பயணமும் அவரைச்சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்த பணந்தின்னிக் கழுகுகளின் (எழுத்துப்பிழையில்லை இது) செயல்பாடுகளும், பூர்ஷ்வா எதிர்ப்பைப் பூர்ஷ்வாத்துவம் எப்படிக் கரைத்துத் தன்னுள் சங்கமித்துக்கொள்கிறதென்பதை நிர்த்தாட்சண்யமாக விளக்குகிறது.

ஆந்தலூசிய நாய் குறித்த விளக்கங்களை அளிப்பதைவிட, நினைவிருக்கும் காட்சிகளை சரசரவென்று சொல்ல முயல்கிறேன், முன்பு சொன்னவற்றுடன் சேர்த்து – தீட்டப்பட்டுக்கொண்டிருக்கும் சவரக்கத்தி, பால்கனி, வெள்ளை நிலா, கறுப்பு மேகம், அறுக்கப்படும் கண், பிதுங்கி வழியும் கண், சைக்கிள் பயணி நடைபாதையில் விழுகிறான், பெண் மேலே அழைத்துச் செல்கிறாள், விரிக்கப்பட்டிருக்கும் கஷ்கம், அதில் வழியும் முடி, fade-out ல் ஒரு குற்றுச்செடி, நின்றுகொண்டு தன் உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவன் கையிலிருக்கும் துளையுள்ளிருந்து கட்டெறும்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, கீழே சாலையில் ஒரு அறுபட்ட கை, மணிக்கட்டு எலும்புகளுடன் கிடக்கிறது, போலீஸ்காரர் ஒருவர் அதை ஒரு பெட்டியில் போட்டு சாலையில் நின்றிருக்கும் ஒரு பெண்ணிடம் அளித்துவிட்டுப் போகிறார், சாலை நடுவில் அவள் மயக்கத்துடன் நிற்கிறாள், மேலேயிருந்து அவனும் அந்தப் பெண்ணும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், சாலைப்பெண்ணை ஒரு கார் அரைத்து நசுக்கிவிட்டுப் போகிறது, காமம் பீறிட அவன், தன்னுடனிருக்கும் அந்தப் பெண்ணின்மீது பாய்கிறான், தப்பித்து ஓடும் அவள், கையிலகப்பட்டதை எடுத்துக்கொண்டு அவனைத் தாக்கத் தயாராக நிற்கிறாள். நின்று நடைபயின்று ஆலோசிக்கும் அவன் தடுமாறி விழுந்து, எழுகையில் தான் பற்றிக்கொண்ட இரண்டு கயிறுகளுடன் அவளைநோக்கி நகர முயல்கிறான், கயிற்றில் இரண்டு பாதிரிகளும் இரண்டு பியானோக்களும் பிணைக்கப்பட்டிருக்கின்றன, பியானோக்களின்மேல் இரண்டு கழுதைகளின் அழுகிய பிணங்கள் கிடக்கின்றன, அனைத்தையும் இழுத்துக்கொண்டு நெருங்கமுயல்கிறான் அவளை, முடியவில்லை, அடுத்துக் காய்ச்சலில் கிடக்கிறான், அவனைப் பார்க்க ஒருவன் வருகிறான்.....

இப்படியாகத் தொடர்பற்று நீளும் கனவுச்சிதறல்களில் ஏகப்பட்ட அர்த்தங்களை விமர்சகர்கள் கண்டுள்ளனர். கண்ணை அறுப்பது, ‘புதிய பார்வையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது, புதிய பார்வை வேண்டும்’ என்பதைக்குறிப்பதாகவும், கழுதை சாவாகவும், பியானோக்கள் வாழ்வாகவும், பாதிரிகள் மதமாகவும், கயிறுகள் சமுதாய ஒடுக்கங்களாகவும் இன்னபிறவாகவும் அர்த்தங்கள் கூறப்பட்டன எனினும், காட்சிகளின் அர்த்தங்களைவிடவும், கனவுச்சிதறல்களின் காட்சிக்கோர்வைகள் நமக்கு உணர்த்தமுயலும் அதிபயங்கரம்/அதிகருணையின் இயக்கத்தின் தாக்கமே முக்கியமானது. பிரஸ்தாபங்களையும் வறட்டு வேதாந்தங்களையும் அதிதெளிவெனக் கருதிக்கொள்ளும் தர்க்கத்தின் அதிகுருட்டுத்தன்மையையும் தாண்ட இலக்கியத்தில் நாம் உருவாக்கிக்கொள்ளக்கூடிய தாண்டுகோல்கள் இத் தாக்கங்களே. நமது தமிழில், இதுபோன்ற அதீதக் கணங்களைச் சினிமாவில் செத்தாலும் பார்க்கமுடியாது என்றாலும், எழுத்து மட்டில், நகுலனது எந்தக் கவிதையிலும் எழுத்திலும், கோணங்கியின் பிற்கால எழுத்துக்களில் மட்டுமே காணக்கிடைத்தது என்பது என் அபிப்ராயம்.

படக் காட்சிகளின் சுட்டி
படத்தின் காட்சிக்கோர்வை

This page is powered by Blogger. Isn't yours?