Thursday, April 28, 2005

Keep the river on your right

Keep the River on Your Right
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: நாராயண்


3 மாதங்களாக தேடியலைந்த டிவிடி கடைசியில் கண்டேன் சீதையை கணக்காய், சின் சிட்டி கிடைக்குமா என்கிற ஆவலில், தேடிய போது சினிமா பேரடைசவோவில் கிடைத்தது. அல்வாசிட்டி விஜய் சென்னை வந்து என்னோடு தொலைபேசியில் பேசிய நீண்ண்ண்ண்ண்ட சம்பாஷனையில் நான் குறிப்பிட்டு சொன்ன படமிது.

வருடம் 1955. ஒரு மனிதன் அமெசான் நதியோடும் கரையிலுள்ள பெருவினுள்ளே (தென்னமரிக்கா அல்லது இன்றைய லத்தின் அமெரிக்கா) மனிதர்களை தின்னும் ஒரு காட்டுமிராண்டி ஆதிவாசிகளிடம் போய்ச் சேர்ந்தான். அஸ்மத் என்கிற மனிதர்களை தின்னும் பழங்குடிகளிடம் மாட்டிய எவரும் உயிரோடு திரும்பியதில்லை. அவனிடத்தில் ஒன்றுமில்லை. வரைப்படமில்லை. துணைக்கு ஆளில்லை. அவனுக்கு சொல்லப்பட்ட ஒரே விஷயம், "நதியை எப்போதும் உன் வலது பக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்". உள்ளே போனவன் திரும்பி வரவில்லை. இறந்துப்போய்விட்டதாக முடிவு கட்டிவிட்டார்கள்.

ஒரு வருடம் கழித்து அங்கிருந்து நிர்வாணமாக ஒரு மனிதன், உடலெங்கும் சாயங்களுடன் வெளிப்பட்டான். அவன் டோபியாஸ் ஷீன்பீம். அவனை அஸ்மத் இனவாசிகள் தத்தெடுத்துக் கொண்டார்கள். ஒரு வெள்ளையன் நரபலி கொடுக்கும் இனத்திலிருந்து வாழ்ந்து வெளிவருவது ஆச்சர்யமென்றால், டோபியாஸ், அஸ்மத் இனக்குடியில் தத்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பின் வருடங்கள் கழித்து மீண்டும் நியுயார்க் வந்தடைந்தார். அன்றிலிருந்து 1975 வரை தொடர்ச்சியாக அஸ்மத் மக்களிடேயே சென்று வாழ்ந்து, அவர்களின் மொழியினை கற்று உண்டு, உறங்கி, அவர்களின் கலைப்படைப்புகளை நியுயார்க்கிற்கு கொண்டு வந்து அவர்களுக்கான ஒரு மையத்தினை உருவாக்கி, அவர்களின் வாழ்வியல் முன்னேற பாடுபட்டவர்.

45 வருடங்கள் கழித்து மீண்டும் டோபியாஸ் தான் வாழ்ந்த அஸ்மத் இனக்குடி இடங்களை பார்வையிட செல்கிறார். அது தான் Keep the river on your right என்கிற இந்த ஆவணப்படத்தின் கதை. 93 நிமிடங்களே ஒடக்கூடிய இந்த படம் தரும் அனுபவங்கள் பரவசமானவை. இரண்டொரு நாட்களுக்கு முன் பாலாஜி-பாரி எழுதிய இன்ன்யூட்களுக்கு சற்றும் சளைக்காத பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்டவர்கள் அஸ்மத் தொல்குழுவினர். உலகின் நாகரிகங்கள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், ஏனோ இன்கா நாகரிகத்திற்கு சரியான அளவில் இடமளிப்பதில்லை. கிரேக்க, ரோம, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகங்களுக்கு இணையான நாகரிகமாக இருந்தது தான் மட்சூ-பிட்சூ மலைகளை சூழ்ந்திருக்கும் இன்கா தொல்குடியினரின் நாகரிகம். அஸ்மத் இனத்தவர்கள் இன்கா காலக்கட்டத்திலிருந்து (கிமு 1200 -1575) வாழ்ந்தவர்கள். பெருவிலுள்ள மட்சூ-பிட்சூ தான் (இப்போது பெருவிலுள்ளது) இன்காக்களின் நகராக விளங்கியது. அத்தகைய பழமை வாய்ந்த ஒரு தொல்குடியினரின் கலாச்சாரம் இப்படத்தில் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

டோபியாஸ் என்ற மனிதன் செய்திருக்கும் வேலை சாதாரணமானதல்ல. உலகே அஞ்சிய நரமாமிச பட்சிணிகளான அஸ்மத் இனக்குடியில் நுழைந்து, அவர்களோடே வாழ்ந்து, அவர்களின் கலாச்சாரத்தினைக் கற்று, உறவு கொண்டு, அவர்களின் கலைகளை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர் சாதாரணமானவராக இருக்க இயலாது. அஸ்மத் கலாச்சாரத்தில் கட்டாயமாக அனைவருமே ஃபை செக்ஸ்வல்தான். எல்லா ஆண்களும், அவர்களுக்கு துணையான ஒரு அல்லது பல ஆண்களோடு உறவு வைத்திருப்பார்கள். அத்தோடு பெண்களோடும் அவர்கள் உறவு கொள்வார்கள். ஆடைகள் ஏதும் கிடையாது. கொலை நடந்ததில்லை. உணவுப் பொருட்கள், ஒரு தலைவரின் மூலம் சரியாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. டோபியாஸின் காதலன் அர்கெட். படத்தில்வரும் இந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். 50 வருடங்கள் கழித்து படக்குழுவினர் அர்கெட்டினை தேடி கண்டுபிடித்து அவர்களிருவரையும் ஒரு படகில் ஒன்றாக செல்ல செய்து படம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் சம்பாஷனைகளின் முடிவில், அர்கெட்டின் ஊர் வருகிறது. அவர் படகிலிருந்து இறங்கி, டோபியாஸினை முத்தமிட்டு பின் விடைபெறுகிறார். இருவரின் கண்களும் கலங்குகின்றன. கேமரா, டோபியாஸின் முகத்தையும், அர்கெட்டின் முகத்தையும் காண்பிக்கிறது. ஒரு வெள்ளையன், ஒரு கருப்பன். மார்ட்டின் லூதர் கிங்கின் ஞாபகம் தான் வந்தது. இருவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன. வாழ்வில் அன்பு, பாசம், காதல் எனப்படுவதின் அர்த்தங்கள் கணநேரத்தில் தெரிகிறது. மாறாத அன்பும், காதலும் சாஸ்வதமானவை.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, படக்குழுவினர், டோபியாஸ் சொல்லிய திசையில் சென்றால், அவர் முந்தி சென்ற இடத்தின் பாதியில் அமெசான் பெருக்கெடுத்து ஒடுகிறது. அங்கிருக்கும் இனக்குடிகளிடம் பழைய போட்டோக்களை காண்பித்து அடையாளம் கேட்கிறார்கள். அவர்களில் முதியவர்கள் டோபியாஸினை அடையாளம் கண்டுக் கொள்கிறார்கள். ஒரு பள்ளி, கல்லூரி ரீ-யூனியனை போல அவர்கள் பேசுகிறார்கள். குதூகலிக்கிறார்கள். ஆனந்தம் அடைகிறார்கள். அவர்களோடு நடக்கும் உரையாடலில் அவர்கள்
"அஸ்மத்க்கள் மாறி விட்டார்கள். மனிதர்களை கொல்லுவதில்லை இப்போது. ஆனாலும், உலகம் அவர்களை இன்னமும் அகிரெய்கெர் என்று தான் பார்க்கிறது. அகிரெய்கெர் என்றால் கிரிமினல், கொலைக்காரன், திருடன் என்று பொருள். ஆனால், தங்களை "ஹம்பெர்கெட்"கள் என்று இடத்தினாலான பெயரிட்டு அழைப்பதேயே தாங்கள் விரும்புவதாக"
சொல்லுகிறார்கள்.

பின் கொஞ்ச கொஞ்சமாய் காடுகளை வெட்டி, டோபியாஸ் முதன்முதலில் சென்ற இடத்திற்கு செல்கிறார்கள். இன்றைக்கு 78 வயதாகும் அந்த முதியவர், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் பிண்ணணியில் அஸ்மத்களின் வாத்தியங்களின் இசை சங்கமங்கள் தெறிகின்றன. படமுழுக்க அவர் வெவ்வேறு இடங்களில் வகுப்பெடுக்கும் போது பாடிக் காட்டும், அஸ்மத் இனக்குடிகளின் பாடல் ஒலிக்கிறது. படம் நிறைவு பெறுகிறது.

அப்பாடலின் தமிழாக்கம்

நதியில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.
நதியில் நாம் மலம் கழிக்கிறோம்.
நதியில் நாம் மூத்திரமடிக்கிறோம்.
மீன்கள் மலத்தை உண்கின்றன
மீன்கள் மூத்திரத்தினை உண்கின்றன.
நாம் மீன்களை உண்கிறோம்.
இது ஒரு சுழற்சி
(நதியில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.....)

“I am a cannibal... No matter into what far corner of my mind I push those words, they flash along the surface of my brain like news along the track that runs around the building at Times Square.”



Keep the River on your Right - A Modern Cannibal Tale ---
IMDB | Docurama | Book

விருதுகள்:
Best Documentary Feature; Hamptons International Film Festival, 2000
Special Jury Award; Amsterdam International Documentary Film Festival, 2000
Audience Award, Special Critics Award; Los Angeles Independent Film Festival, 2000
Truer Than Fiction Award; IFP Independent Spirit Awards, 2001
Best Documentary, Newport Beach Film Festival

This page is powered by Blogger. Isn't yours?