Thursday, April 28, 2005

400 Blows

400 Blows
அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: அல்வாசிட்டி விஜய்


பதின்ம வயதில் வீணாக போனவனின் கதை. விமர்சனத்துக்கு இறங்கும் முன் படத்தை பற்றிய சில விவரங்கள்.

படம் : தி 400 ப்ளோஸ்
ஆண்டு : 1959
மொழி : பிரெஞ்சு
ஓடும் நேரம்: 1:39
இயக்குநர் Vs தயாரிப்பாளர் : பிரான்சிஸ் த்ரூஃபா (François Truffaut)
திரைக்கதை : பிரான்சிஸ் த்ரூஃபா, மார்செல் மௌச்சே
விருது : 1959 கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது

அண்டொனி டாய்னல் (நடிகன் பெயர் Jean-Pierre Léaud) 14 வயது நிரம்பிய பதின்ம வயதினன். பதின்ம வயதினனின் வேதனையும், புறக்கணிப்பும் காட்சிகளாக விரிவது தான் 'தி 400 ப்ளோஸ்'.

அண்டொனி டாய்னல் அதீத கற்பனைவளமும், மிகுந்த விளையாட்டு புத்தியும் மிகுந்தவன். வரி பிசகாமல் ஒப்பிவிக்கும் பள்ளி உலகத்தை விரும்பவில்லை. விளையாட்டு தனம் மிகுதியால் ஆசிரியர்களிடம் தண்டனைகளை பெற்று பள்ளியில் தன் பெயரை சுத்தமாக கெடுத்துக் கொண்டவன்.அதனால் பள்ளியில் எப்போதுமே நிராகரிக்கப்படுகிறான். வீட்டிலும் அதே கதை தான். டாய்னலின் தாய் திருமணம் ஆவதற்கு முன்பே வேண்டா வெறுப்பாக டாய்னலை பெற்றுக் கொண்டவள். குடும்பத்தை விட்டு எவ்வளவு நேரம் வெளியே செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரத்தையும் செலவழிப்பவள். அவள் வீட்டிற்கு வந்தால் எப்போதுமே டாய்னாலின் மேல் 'சள்' என்று விழுபவள்.

டாய்னலின் தந்தையும் அவனிம் மீது அதிக அக்கறை காட்டுவதில்லை. சில நேரம் ஜாலியாக பேசும் அவர் சில நேரம் டாய்னலின் மீது எரிந்து விழுவார்.அந்த மாதிரியான உலகத்திலிருந்து மீள அவனுக்கு மாற்று உலகம் தேவைப்படுகிறது. தந்தையிடம் நைசாக பேசி காசு வாங்கிக் கொண்டு அவனையொத்த நண்பனுடன் விளையாட்டு அரங்கினில் காசு கொடுத்து விளையாடுவதும், சினிமா பார்ப்பதுமாக தனக்கென தனி உலகம் அமைத்துக் கொள்ள விழைகிறான். இந்த லட்சணத்தில் தாய் வேறு ஒருவனுக்கு முத்தம் கொடுப்பதை பார்த்து விடுகிறான்.தான் தோன்றித் தனமாக பள்ளிக்கூடம் செல்லாமல் காலம் கழிக்கும் டாய்னல், பள்ளிக்கு திரும்பும் போது, ஏன் விடுப்பு எடுத்தாய் என காரணம் கேட்பார்களே என்று 'தன் தாய் இறந்து விட்டாள்' என ஆசிரியரிடம் பொய் சொல்கிறான்.

பொய் எப்படியோ தெரிந்து கடுமையாக தண்டிக்கப்படுகிறான். இனி வீட்டில் தன்னால் வாழ முடியாது என்று அந்த இரவில் வீட்டுக்கு வரமால் ஓடி விடுகிறான்.பசிக்கு அந்த இரவில் பால் புட்டியை திருடி திருட கற்றுக் கொள்கிறான். மறுநாள் தாய் அவனை கண்டுபிடித்து முதல் முறையாக பரிவாக பேசி படிக்க ஊக்கப்படுத்துகிறாள். டாய்னலோ எனக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை, நான் வேலை செய்ய கற்றுக் கொள்கிறேன் என்பதையும் அந்த தாய் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இருந்தாலும் திருந்த நினைக்கும் டாய்னலுக்கு பள்ளியில் தான் எழுதிய நேர்மையான கட்டுரைக்கும், அவன் மீது இருக்கும் கெட்ட அபிப்ராயத்தால், டாய்னல் யாருடைய கட்டுரையோ திருடி விட்டதாக குற்றம் சாட்டி தண்டிக்க முயற்சிக்கிறார்கள்.

அன்று ஓட்டம் பிடித்த டாய்னல் தன் நண்பனுடம் சேர்ந்து காசுக்காக அவன் தந்தை அலுவலகத்திலிருந்து ஒரு டைப்ரைட்டரை திருடுகிறான். தவறு செய்கிறோமோ என்ற எண்ணத்தில் டைப்ரைட்டரை திருப்பி தன் தந்தை அலுவலகத்தில் வைக்க செல்லும் போது மாட்டிக் கொள்கிறான். வெறுப்பை உமிழும் தந்தை அவனை சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பதற்காக போலீஸிடம் ஓப்படைக்கிறார்.அங்கு அவனுக்கு மேலும் பல கெட்ட அனுபவங்கள். சிறைக்கு வரும் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் தான் நிராகரிக்கப்படுவது தான் எல்லா குற்றங்களுக்கும் காரணம் என்ற அடிப்படையில் பேசுகிறான். சீர்திருத்தப்பள்ளியிலும் அவன் தன் உலகத்தை கண்டுக் கொள்ளவில்லை. அங்கிருந்து தப்பி ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான். கடைசியில் ஒரு கடற்கரை அடைந்த மாதிரி காண்பித்து இயக்குநர் பார்வையாளர்களுக்கே டாய்னலின் முடிவை விட்டுவிடுகிறார்.

1959-ம் ஆண்டு பிரெஞ்சு சினிமாவில் எழுந்த புதிய அலை சினிமாவில் த்ரூஃபாவின் இந்த படமும் முக்கியமானது. உலகத்து முதல் முக்கிய 100 திரைப்படங்கள் வரிசையில் இதுவும் முக்கியமானதொரு சினிமா. அந்த காலக்கட்டம் வரை எந்த சினிமாவும் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சினிமாவில் எடுத்துக் கையாளவில்லை. சிறுவர்களும், குழந்தைகளும் ஒரு விளையாட்டு/சந்தோச குறியீடாகவே சினிமா பயன்படுத்தி வந்தது.

பதின்ம வயதில் ஏற்படும் மனமாற்றங்களையும்,ஏமாற்றாங்களையும்,அவர்களின் குரல்கள் நிராகரிக்கப்படுவதையும் 'தி 400 ப்ளோஸ்' என்ற சினிமாவின் மூலம் த்ரூஃபா முதல் முறையாக வெளிச்சம் போட்டு காட்டினார்.

ப்ளாக்கர்களில் அவ்வவ்ப்போது கற்பனை மிக்க சினிமாவுக்கு ஆதரவு குரல்கள் இருக்கும் எப்படியென்றால் 'யாதார்த்தம் என்பதை வாழ்க்கையில் எப்போதுமே காணுகின்றோமே,அதுக்காக எதற்கு சினிமா?" என்று. சில யதார்த்தங்களை வாழ்க்கையில் தவற விட்டுவிடுவதால் சில சமயம் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.அப்போது இந்த மாதிரி யதார்த்த சினிமாக்கள் போகிற போக்கில் போகும் நம் பார்வையை திசை திருப்பி கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

பதின்ம வயது பிரச்சனைகள் என்பது மிக விரிவாக விவாதிக்கப்படவேண்டிய தலைப்பு. தமிழ் சினிமாவில் 'துள்ளுவதோ இளமை, சில பாலுமகேந்திரா (பெயர் ஞாபகமில்லை) படங்களும் முன் வைத்தன. மொத்தத்தில் பதின்ம வயதினருக்கு நிராகரிப்பில்லாத தனி கவனமென்பது கட்டாயம் தேவை. அதை கடந்து வந்த நமக்கும் தெரியுமே.

இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே சொடுக்கவும்.

This page is powered by Blogger. Isn't yours?